கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உறவினரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அன்னூர் அருகேயுள்ள செங்கப்பள்ளியைச் சேர்ந்தவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டரை வயதில் மகள் உள்ளனர். குழந்தையின் தந்தை, தன் பெற்றோரைச் சந்திக்க கடந்த 23-ம் தேதி தொட்டிபாளையத்துக்குச் சென்றார்.
இதனால் அன்று இரவு குழந்தையின் தாய் விளாங்குறிச்சியில் அவரது பெற்றோர் வீட்டிலேயே தங்கினார். அவருடன் குழந்தையும் தங்கியது. மறுநாள் அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தாய் பார்த்தபோது, குழந்தையைக் காணவில்லை.
குடும்பத்தினர் தேடிப்பார்த்த போது, வீட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் உள்ள 100 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் குழந்தை சடலமாகக் கிடந்தது தெரிந்தது.இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் சந்தேகப் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், பாலியல் தொல்லை அளிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரின் தொடர் விசாரணையில் குழந்தையை அவரது உறவினர் ரகுநாதன் (27) கொன்றது தெரியவந்தது.
வீட்டில் இருந்த உறவினர்
இது குறித்து மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, ''குழந்தை தங்கியிருந்த வீட்டில் 2 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதனால் வெளி நபர்கள் வந்து செல்ல வாய்ப்பு இல்லை. வீட்டில் இருந்த யாரோ தான் கொலை செய்திருக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது.
வீட்டுக்குள் படுத்திருந்த 4 பேரிடமும், வெளியே படுத்திருந்த 2 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குழந்தை கிடந்த கிணற்றின் அருகே மதுபாட்டில் கிடந்தது. இதை வைத்து விசாரித்த போது, குழந்தையின் உறவினர் ரகுநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து முறைப்படி விசாரித்தோம். இதில் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ரகுநாதன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் சந்தேகப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு இருந்தது. பின்னர் கொலை மற்றும் போக்சோ சட்டப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்றனர்.
பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்
கைது செய்யப்பட்ட ரகுநாதன் வாக்குமூலம் அளித்தார். அதில், ''டிப்ளமோ படித்துள்ள நான் சொந்தமாக 10 மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு மது குடித்த பின்னர், வீட்டில் இருந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யத் திட்டமிட்டு வெளியே தூக்கிச் சென்றேன்.
அப்போது, குழந்தை சத்தம் போட்டது. இதனால் பாலியல் பலாத்கார முடிவைக் கைவிட்டேன். குழந்தையைத் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் சென்றால் மாட்டிக் கொள்வேன் என நினைத்து, கிணற்றில் வீசிவிட்டு வந்து படுத்துவிட்டேன்.
அதன்பின்னர், ஒன்றும் தெரியாதது போல் குழந்தையைத் தேடினேன். விசாரணையில் சிக்கிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.