தமிழகம்

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகாவுக்கு ரூ.20 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2011-ல் அறிவித்தது. அதன்படி, தமிழக அரசு தங்களை பாராட்டி ரூ.20 லட்சம் ரொக்கப்பரிசை வழங்குகிறது.

இனிவருங் காலங்களில் இந்தியாவுக்காக மேன்மேலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT