தமிழகம்

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை; தமிழகம், புதுவை சட்டப்பேரவைகளில் விவாதம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்

செ.ஞானபிரகாஷ்

புதிய வரைவு அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசவில்லை. கூட்டாட்சி தத்துவம், சமூக நீதிக்கு எதிராக வரைவு  அறிக்கை உள்ளது.  எனவே, இந்த வரைவு அறிக்கை குறித்து தமிழகம், புதுவை சட்டப்பேரவைகளில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டார்.

புதுச்சேரி ஆசிரியர் சங்கம் சார்பில் புதுச்சேரி முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவு அறிக்கை குறித்த கருத்தரங்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது:

கல்வியில் மத்திய,  மாநில அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், புதிய வரைவு அறிக்கையில், புதிதாக அமைக்கப்படும் தேசியக் கல்வி ஆணையம் பிரதமர் தலைமையில் இயங்கும்.  மேலும்,  உயர் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையம்,  ஆராய்ச்சிக்கு நிதி வழங்கும் அமைப்பு,  உயர் கல்வி மானியக்குழு என புதிய அமைப்புகளை உருவாக்கும் திட்டம் இந்த வரைவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் முழுக்க முழுக்க மத்திய அரசிடம் அதிகாரம் குவியும்.

மாநில அளவில் முதல்வர்கள் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் உருவாக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், மத்தியக் கல்வி ஆணையம் வழிகாட்டுதலில் தான் மாநிலக் கல்வி ஆணையம் இயங்கும். இது  கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான  மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி,  சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு போதுமான அளவு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று கூறுகிறது.  ஆனால்,  இப்புதிய கல்வி முறை இதற்கு எதிராக உள்ளது.  உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. சமூக நீதிப் பார்வையில் இருந்து இந்த அறிக்கை முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

8 முதல் 14 வயது வரை தொடக்கக் கல்வி என்கின்றனர்.  அதற்கு பிறகு 9 முதல் பிளஸ் 2 வரை இடைநிலைக் கல்வியாக மாற்றுகின்றனர்.  இந்த 4 ஆண்டுகளில் 8 பருவத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  தேர்வு வாரியத்தில் தனியாரையும் புகுத்த முடிவு செய்துள்ளனர்.  தேர்வுத்துறையில் தனியாரைப் புகுத்துவது நியாயமற்றது.

புதிய வரைவு அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசவில்லை. கூட்டாட்சி தத்துவம், சமூக நீதிக்கு எதிராக வரைவு  அறிக்கை உள்ளது.  எனவே, இந்த வரைவு அறிக்கை குறித்து தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைகளில்  சிறப்பு விவாதம் நடத்த வேண்டும்''.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்வியாளர் என்.மாதவன், தமிழ்நாடு-புதுவை பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, புதுவை அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT