தமிழகம்

மழை வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் யாகம்

செய்திப்பிரிவு

ஈரோடு, பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை வேண்டி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தினார்.

பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீத் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை வழங்கிய நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட்டன.

இந்நிலையில் மழைக்காக சிறப்பு யாகங்களை நடத்துமாறு அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர். இந்தப் பூஜைகளில் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு, கோபிச் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (சனிக்கிழமை) காலை யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஈரோடு ஆவின் தலைவர் காளியப்பன் மற்றும் கட்சியினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதும் இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைக்காக யாகங்கள் நடத்தப்பட்டன. நம்பிக்கையில் அடிப்படையில் இந்துக் கோயில்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ ஆலயங்களிலும் மழை வேண்டி வழிபாடுகள் நடந்தன. அதேபோல இந்த வருடமும் மழைக்காக பூஜைகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன.

ஈரோட்டைப் போல மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரை மாநகர மாவட்ட கழகம் சார்பாக இன்று மழைக்காக வருண ஜெபம் நடத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

அதேபோல கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடைபெற்றது. சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுகவின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT