கேரளாவில் நிபா(NIPAH) வைரஸ் பரவும் நிலையில் அங்கிருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்தில் பரவினால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 'நிபா வைரஸ்' தனி தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் 33 படுக்கை வசதியுடன் 24 மணி நேரம் தயார்நிலையில் மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் 'நிபா' வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் அந்நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்நிலையில் அங்கிருந்து தமிழகத்திற்கு பரவும் வாய்ப்புள்ளதால் தமிழக சுகாதாரத்துறை அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.
மாநில எல்லையோர சோதனைச்சாவடிகள் அருகே தற்காலிக மருத்தவ முகாம்களை அமைத்து, கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரை பரிசோதனை செய்தே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கப்பட்டதால் அந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிபா வைரஸ் தனி தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைப்பிரிவுக்கு தனி மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நிபா வைரஸ் தனி தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'டீன்' வனிதா கூறுகையில், "நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் 33 படுக்கை வசதிகள் கொண்டு தனி சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சைப் பிரிவு அமைக்க வலியுறுத்தியுள்ள நிலையில் இங்கும் 33 படுக்கை வசதிகள் கொண்டு தனி சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் வந்தால் அவர்களுக்காக இந்த சிகிச்சைப்பிரிவில் ஐசியூ வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள், அதற்கான சிகிச்சை கருவிகள்(Personal Protection equipments) தயார் நிலையில் உள்ளன" என்றார்.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை:
முன்னதாக, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்திவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் போன்ற எல்லையோர பகுதிகளில் கூடுதல் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் இருந்து வருவோரிடமும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்டவை நிபா வைரஸ் அறிகுறியாக இருக்கிறது. இதனால், காய்ச்சல், தொண்டைவலி இருப்பவர்கள் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு நிபா தாக்கம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.