தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) படித்த சென்னை மாணவி பி.எல்.வித்யா 7 தங்கம் உட்பட 10 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தலைமை தாங்கினார். மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த மாணவ, மாணவிகளுக்கு ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.
14,260 பேருக்கு பட்டங்கள்
சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செய லாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.சாந்தாராம் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் நேரடியாக 4,512 பேர் உட்பட 14,260 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 84 தங்கப் பதக்கங்கள், 91 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 175 பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சை, நெல்லை மாணவர்கள் சாதனை
சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்பிபிஎஸ் படித்த, சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தை சேர்ந்த பி.எல்.வித்யா என்ற மாணவி 7 தங்கம், 2 வெள்ளி உட்பட 10 பதக்கங்களைப் பெற்றார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். (பொது அறுவை சிகிச்சை) படித்த எம்.ராஜீவ் என்ற மாணவர் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்களையும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படித்த கிருஷ்ணமோகன் என்ற மாணவர் 2 தங்கம், 2 வெள்ளி என 4 பதக்கங்களையும் பெற்றனர்.
கவுரவ டாக்டர் பட்டம்
சிறப்பான சேவை புரிந்ததற்காக டாக்டர்கள் ஏ.பார்த்தசாரதி, எஸ்.விட்டல், கே.ஆர்.பழனிச்சாமி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவை தவிர டாக்டர்கள் சையது அமீத் அகமது, சத்தியமூர்த்தி, சிற்றம்பலம், ராஜன் சந்தோஷம், மெய்யப்பன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
யுனிசெப் அதிகாரி பேச்சு
விழாவில் சிறப்பு விருந்தினராக யுனிசெப் (தமிழ்நாடு, கேரளா) தலைமை அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
இந்தியா போலியோ பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மருத்துவச் சுற்றுலா மூலம் 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. அதே நேரம், மருத்துவச் செலவு அதிகமாவதால் 3.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்படுகின்றனர். மருத்துவ செலவினங்களில் 80 சதவீதம் தனியாருக்கு செல்கிறது. ஊட்டச் சத்து குறைபாடுடன் குழந்தை பிறப்பு, பாலியல் வன்முறை, பெண் குழந்தைகள் கருக்கலைப்பு போன்றவை அதிகம் உள்ளன. இவை தடுக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
10 பதக்கங்கள் பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி பி.எல்.வித்யா கூறும்போது, ‘‘கஷ்டப்பட்டு படித்தேன். எம்எம்சி பேராசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். எம்.டி. படிக்க விரும்புகிறேன். நல்ல டாக்டராக வரவேண்டும் என்பதே லட்சியம்’’ என்றார்.