மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் 6.5 கிராம் எடையில் தங்கத்தினாலான மசூதியை ஆம்பூர் நகை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் (51). தங்க நகை வடிவமைப்பாளர். இவர், உலக சாதனைக்காக மிக குறைந்த அளவு எடையுள்ள தங்கத்திலான பல்வேறு மாதிரி பொருட்களை வடிவமைத்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நகை வடிமைப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தேவன், ஏற்கெனவே தங்கத்தில் மிகச்சிறிய அளவிலான இந்திய வரைபடம், காலணிகள், தூய்மை இந்தியா மாதிரி வரைபடம், உலக கோப்பை கிரிக்கெட், திருக்குறள் சுவடி, மகாத்மா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, தமிழக அரசின் பசுமை வீடு திட்டம், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட ஏராளமானவற்றை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் 6.5 கிராம் எடையில் தங்கத்துடன், 35 கிராம் வெள்ளியும் சேர்த்து அழகிய மசூதியை வடிவமைத்துள்ளார். இதனை, ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பார்த்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து தேவன் கூறும்போது, "கடந்த 35 ஆண்டுகளாக நகை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கின்னஸ் சாதனைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
தற்போது ரம்ஜான் பண்டிகை யையொட்டி 6.5 கிராம் எடையில் தங்கத்தினாலான மசூதி ஒன்றை வடிவமைத்துள்ளேன். தங்கத்துடன் 35 கிராம் வெள்ளியும் சேர்த்துள்ளேன். இதற்காக, 2 நாட்கள் செலவிட்டுள்ளேன்" என்றார்.