தமிழகம்

நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் காவலரை தாக்கிய 4-பேர் கைது

செய்திப்பிரிவு

நுங்கம்பாக்கத்தில் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்த 4 பேரை கலைந்துப் போகச்சொன்ன காவலரை தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாண்டிபசார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு  காவலர்  கார்த்திகேயன் நேற்றிரவு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஷிப்ட் கார் ஒன்றில் வந்த நான்குபேர் அங்கு நின்றுக்கொண்டிருந்த திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த காவலர் கார்த்திகேயன் அவர்கள் அருகில் சென்று அங்கிருந்து கிளம்பிச் செல்லும்படி கூறியுள்ளார்.

மதுபோதையில் இருந்த அந்த நான்கு பேரும் தாங்கள் வழக்கறிஞர் என்றும் அதனால் போக முடியாது என்றும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் காவலர் தனது பைக்கில் வைத்து இருந்த லத்தியை அந்த 4 பேரும் எடுத்து காவலரை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் தாக்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் வாக்கி டாக்கியில்  மற்ற காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே வாக்கி டாக்கியையும் அவர்கள் உடைத்துள்ளனர்.

ரோந்து பணியில் இருந்த மற்ற காவலர்கள் அங்கு வந்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.  விசாரணையில்  ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த  முஹம்மது அக்பர்,  முகமது நவ்ஷத் என தெரியவந்தது.

நான்கு பேரையும் சோதனை நடத்தியதில் 4 பேரும் வழக்கறிஞர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஐபிசி 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) 332 (பணியிலிருக்கும் அரசு ஊழியரை தாக்குதல்) 506(2) ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாக்கப்பட்ட காவலர் கார்த்திகேயன் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT