தமிழகம்

நீதிபதி தேர்வுக்கு பார் கவுன்சில் பதிவு அவசியமில்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புக்கு எதிராக போராட்டக்களத்தில் வழக்கறிஞர்கள்

என்.சுவாமிநாதன்

நீதித்துறையில் காலியாக உள்ள 162 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

முந்தைய நடைமுறைகளின்படி நீதிபதிகள் தேர்வு எழுதுவதற்கு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடந்த 2009-ம் ஆண்டு நீதிபதிகளின் தேர்வு நடைபெற்றபோது பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களும், பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போதே சர்ச்சை கிளம்பியது. இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் ‘‘பார் கவுன்சிலில் பதிவு செய்யாத சட்டப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்றவர்களுக்கு 3 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதுதான் வழக்கறிஞர்கள் குழாமை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பார் கவுன்சிலில் பதிவு செய்த இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரால்டு கூறும்போது, `சட்டப்படிப்பு படித்துவிட்டு நீதிமன்றத்துக்கு பயிற்சிக்கு வருபவர்களுக்கே பார் கவுன்சில்தான் அகில இந்திய அளவில் தகுதி தேர்வு நடத்துகிறது. ஒருவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அவரது கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்ட பல விஷயங்களையும் பார் கவுன்சில்தான் அலசுகிறது. நிலைமை இப்படி இருக்க, பார் கவுன்சிலில் பதிவு செய்யாமலே நீதிபதி தேர்வை எழுத அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

`சட்டம் முடித்து வருபவர்களையே நீதித்துறைக்கு பயன்படுத்த வேண்டும்’ என ஷெட்டி கமிஷன் கூறியதன் அடிப்படையிலேயே இப்படி செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் இதன் பின்னணி உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. நீதிமன்றத்தில் பயிற்சி பெறாமல், பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல் சிலரை நீதித்துறை அதிகார மையத்தில் கொண்டு வரவே இந்த முயற்சி நடக்கிறது’ என்றார்.

வழக்கறிஞர் மரிய ஸ்டீபன் கூறும்போது, `வழக்கமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வில் வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. இது சமூக நீதிக்கும் எதிரானது.

அதே அறிவிப்பில் 27 வயது வரை முன் அனுபவம் இல்லாத சட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத வகை செய்துள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் 25 வயதில் சட்டம் முடித்துவிட்டு பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் இந்த தேர்வை எழுத முடியாது. காரணம் அவர் 3 ஆண்டு பயிற்சியை எட்டவில்லை என்கிறார்கள்.

மொத்தத்தில் பார் கவுன்சிலை அதிகாரம் இல்லாத அமைப்பாக சித்தரிக்கவே இந்த முயற்சி நடக்கிறது. இதைக் கண்டித்து சில தினங்களுக்கு முன், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தினோம். இப்போது இப்புதிய முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி பேராணை மனு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT