தமிழகம்

ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் தீர்த்தம் ஆடினர்

செய்திப்பிரிவு

மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து தீர்த்தம் நீராடினர்.

சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும். முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஐதீகத்தை இந்துக்கள் ஆடி அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்களில் நிறைவேற்றி பூர்த்திசெய்வர்.

மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்களும், பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் சேதுக்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

SCROLL FOR NEXT