சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை அரசியல் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் தமிழகம் வந்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விட்டால் அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும்.
அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில்தான் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், இங்கு வந்து சொந்தத் தொகுதியில் வாக்களித்ததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
அவர்களின் விமானப் பயணங்களை ரத்துசெய்து, அவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குமாறாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளது தெரியவந்தது.
அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர்.
இப்படி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.