தமிழகம்

கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கைகொடுக்குமா?: பிரச்சாரத்துக்கு தயாராகும் தலைவர்கள்

எம்.மணிகண்டன்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜகவுக்கு கூட்டணி கட்சிகள் அளிக்கும் ஆதரவு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்களும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆனால், அதிமுகவுக்கு போட்டியாக பாஜக களமிறங்கியுள்ளது. ஆரம்பத்தில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சொன்ன தேமுதிகவும் மதிமுகவும் பின்னர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே கோவை, நெல்லை, தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கும் புதுக்கோட்டை, குன்னூர், ராமநாதபுரம், விருத்தாச்சலம், கடலூர் உள்ளிட்ட நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

கோவை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தகுமார், மாவட்ட பாஜக தலைவராக உள்ளார். தூத்துக்குடி மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமியின் கணவர் கனகராஜ், மாவட்ட வடக்கு மண்டல தலைவராக பதவி வகிக்கிறார். சிமென்ட் வியாபாரம் செய்யும் அவர் தாராளாமாக செலவு செய்வார் என்பதால் அவரது மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நெல்லை மேயர் வேட்பாளரான வெள்ளையம்மாள், மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். பெரிய பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் ஆர்வமாக கட்சிப் பணியாற்றி வந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே கன்னியாகுமரி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சிகளை பாஜக கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தேர்தலில் முக்கிய கட்சியான திமுக புறக்கணிப்பு செய்துள்ள நிலையில், கூட் டணிக் கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்கியுள்ள பாஜக, சில இடங்களையாவது பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் பிரச்சாரத்துக்கு அழைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக நம்பிக்கையுடன் வேட்பாளர் களை அறிவித்துள்ளது. நானும் கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரத்துக்கு செல்லவுள்ளோம். கூட்டணி கட்சித் தலைவர்களையும் அழைத்துள் ளோம். புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் எங்களது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது சில பிரச்சினைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையான தகவல் கிடைத்ததும் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதா இல்லை வழக்கு தொடுப்பதா என்று முடிவு செய்வோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT