உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் சித்ரவதை செய்யப் பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
மதுரையைச் சேர்ந்த பி.ராஜ குமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
“நான் எனது கணவருடன் மதுரையில் வசிக்கிறேன். எனது தாயார் உடுமலைப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் எனது தாயார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் அண்மையில் கொலை செய்யப் பட்டார். உண்மையான கொலை யாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக, அப்பாவியான எனது தாயாரை கைது செய்த உடுமலைப்பேட்டை போலீஸார், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தி எனது தாயாரை சித்ரவதை செய்துள்ளனர். எனது தாயாரின் விரல்கள், நகங்களில் ஊசியைக் குத்தி கொடுமைப் படுத்தியுள்ளனர்.
அவரது உடைகளை அகற்றி அரை நிர்வாணமாக தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். பாலியல் ரீதியாக எனது தாயார் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
விஏஓ-விடம் சரண்
எனினும் இந்தக் குற்றச்சாட்டு களை காவல் துறை தரப்பில் மறுத்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த உடுமலைப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏ.தவமணி, “மனுதாரரின் தாயாரை சட்ட விரோதமாகக் காவலில் அடைத்துவைக்கவில்லை. தான் கொலை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டு உடுமலைப் பேட்டை வி.ஏ.ஓ. முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சரணடைந்துள்ளார். அவரை காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. ஒப்படைத்தார்.
அதன் பிறகு புலன் விசாரணை நடத்தப்பட்டு மனுதாரரின் தாயார் கைது செய்யப்பட்டார். அவரை காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை” என அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வரும் நாளை (செப்.17) தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கின் புலன் விசாரணையை யார் மேற்கொள்வது, மனுதாரரின் தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தீர்ப்பில் தெரியவரும்.
மனுதாரரின் தாயார் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.