தருமபுரியில் வீட்டிற்குள் உட்புறமாக தாழிட்டுக் கொண்டு திறக்கத் தெரியாமல் தவித்த 2 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தருமபுரி பிடமனேரி அருகி லுள்ள பகுதி மாந்தோப்பு. இங்கு வசிக்கும் பெரியண்ணன் என்பவரின் 2 வயது மகள் த்ரிஷா. சிறுமி நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது ஒரு அறையின் உள்ளே சென்று விளையாட்டாக கதவை உட்புறமாக தாழிட்டுள்ளார்.
அதன்பிறகு சிறுமிக்கு அந்த தாழ்பாளை திறக்கத் தெரியவில்லை. இதனால் சிறுமி கதறி அழுத் தொடங்கினார். சிறுமியின் பெற்றோரும், அருகில் இருந்தவர்களும் முயன்றும் கதவை திறக்கத் தெரியவில்லை. எனவே தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் ராஜேந்திரன், மீட்புப் பணிகள் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறுமி சிக்கிக் கொண்ட அறைக்கதவின் தாழினை உபகரணங்கள் உதவியுடன் உடைத்து கதவைத் திறந்தனர். அதன் பின்னர் தாயிடம் ஒட்டிக் கொண்டு அழுத சிறுமி வெகு நேரத்துக்குப் பிறகே அழுகையை அடக்கினாள். தகவல் கிடைத்த உடன் விரைந்து வந்து சிறுமியை மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் இதுபற்றி கூறும்போது,
‘நிறைய வீடுகளில் இதுபோன்ற அலட்சியம் நிலவுகிறது. விபரம் அறியாத குழந்தைகளுக்கு எட்டாத வகையில் கதவுகளில் தாழ் அமைக்க பழக வேண்டும். அல்லது சிறு குழந்தைகள் சற்றே வளரும் வரை அவர்களுக்கு எட்டு வகையில் உள்ள தாழ்களை மட்டும் தற்காலிகமாக இயங்க முடியாதபடி செய்ய வேண்டும். தாழ்பாள் லாக் ஆகும் துவாரத்தில் காகிதங்களை சுருட்டி வைத்தோ அல்லது கார்க் போன்றவற்றை பயன்படுத்தியோ தற்காலிகமாக அடைத்து வைக்கலாம்.
பெற்றோர் சொல்வதை கேட்கும் அளவு குழந்தைகளுக்கு பக்குவமும், தாழினை மற்றவர் உதவியின்றி திறந்து கொள்ளும் முதிர்ச்சியும் ஏற்பட்ட பிறகு அதை அகற்றி விடலாம். சிறு குழந்தைகள் வைத்திருப்போர் இதை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.