தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் அசாதாரணமான சூழல் நிலவியபோதும் நாங்கள் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ‘தி இந்து’விடம் தமிழிசை நேற்று கூறியதாவது:
தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜக நம்பிக்கையோடு போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் நாங்கள் 2 அதிகார மையங்களை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது. ஒன்று ஆளுங்கட்சியினரின் அத்துமீறல், மற்றொன்று மாநில தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்கு. வேட்பு மனு தொடங்கிய நாள் முதலே எங்களது வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு ஆளாகினர். இடைத்தேர்தலில் மிகப் பெரிய அசாதாரணமான சூழலை நாங்கள் சந்தித்தோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள், எல்லா இடத்திலும் பாஜகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால், நாங்கள் எல்லா இடத்திலும் டெபாசிட் பெற்றுள்ளோம். கோவை, ராமநாதபுரத்தில் அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம். நாங்கள் பெற்றது சுத்தமான வாக்குகள். ஆனால் வெற்றி பெற்றிருப்பவர்களின் வாக்குகளோ கள்ள வாக்குகள். பண பலத்துக் கும் மன பலத்துக்கும் நடந்த இந்தத் தேர்தலில் நாங்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டோம். மிரட்டல்களுக்கு பயப்படாமல் களப்பணி ஆற்றிய பாஜகவினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.