ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய சிலைகள் மூலம், நமது பாரம்பரிய கலை பொக்கிஷங்கள் மீது சர்வதேச அளவில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதன் தாக்கத்தால் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் தொன்மையான சிலைகளின் திருட்டு, புது வேகத்தில் தொடங்கியுள்ளது கவலையளிப்பதாக உள்ளது.
சுபாஷ் கபூர் கும்பல் கடத்தி விற்ற பல கோடி மதிப்பிலான சிலைகள் மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட உள்ளன. ஆஸ்திரேலியா வில் இருந்து திரும்ப கொண்டு வந்திருக்கும் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையும், விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலையும் இதன் ஆரம்பம்.
இதில் ஸ்ரீபுரந்தான் சிலை மட்டுமே அக்கரை சீமையில் ரூ.34 கோடிக்கு கைமாறி இருக்கிறது. இந்த செய்தி களால் தற்போது அதுபோன்ற சிலைகளுக்கு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழன் அரியணை யேறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி, ஊர் முழுக்க உழவாரப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது கிடைத்த சிலைகள், கல்வெட்டுகள் பலவும் சேகரிக்கப்பட்டன. வரலாற்று ஆய் வாளர்கள் அவற்றை பார்வையிட்டு புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த சிலைகளில் பலவும் தற்போது திருடு போவது தான் அதிர்ச்சி.
இதுகுறித்து சோழன் விழா ஒருங்கிணைப்பாளரான கோமகன் கூறியபோது, “கங்கைகொண்ட சோழபுரம் நாச்சியார் குளம் அருகே செல்லியம்மன் கோயில் பகுதியிலிருந்து கேட்பாரற்ற பல சிலைகளை சேகரித்து அந்த கோயிலுக்குள்ளேயே பாதுகாத் தோம். வரலாற்று ஆய்வாளரான இல.தியாகராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு உறுதிசெய்த அவற்றில் பிற்கால சோழர் காலத் திய ராணியார், மகிசாசுரவர்த்தினி, பைரவர் மற்றும் விஷ்ணு துர்க்கை சிலைகள் தற்போது திருடு போயுள்ளன. அதே சமயத்தில் பண்ருட்டி அருகே தேவியருடனான திருமால் சிலையும் களவு போயி ருக்கிறது.
கங்கை கொண்ட சோழ புரத்தில் மீண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரகதீஸ்வரர் கோயில் எதிரே அரச மரத்தடி விநாயகர் சிலையும் திருடு போனது.
250 ஆண்டுகளுக்கு மேலாக சோழர் தலைநகராக கோலோச்சிய ஊரில் முதல்முறையாக கிடைத்த ராணியார் சிலை காணாமல் போனது எங்களுக்கு வருத்தமளிக்கிறது” என்றார்.
பேராசிரியர் இல.தியாகராஜன் கூறும்போது, “இன்னும் அகழ்வில் கிடைத்த ஏராளமான சிலைகள் ஊரைச்சுற்றி கேட்பாரற்று கிடக் கின்றன. இது தொடர்பான விளக் கங்கள் பொதுவில் பகிரப்பட்டால், அவற்றின் இருப்புக்கும் பங்கம் வருமோ என்று அச்சமாக இருக் கிறது” என்றார் தயக்கத்தோடு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் காணாமல் போன சிலைகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் சார்பில் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.காவல் நிலையத்தில் விசாரித்தபோது, சிலைகளை தேடிக்கொண்டிருக் கிறோம் என்றனர். ஆனால், புகார் கொடுத்த ஊர் மக்களோ, கற்சிலைகள்தானே என்று போலீ ஸார் அலட்சியம் காட்டுவதாகவும், புகார் இன்னமும் பதிவு செய்யப் படவில்லை என்றும் வருத்தப் பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜியாவுல் ஹக்கை தொடர்பு கொண்டபோது, “உடனடியாக இதுபற்றி விசாரிக்கிறேன்” என்று உறுதியளித்தார்.