தமிழகம்

வியாபாரியின் மனைவிக்கு 5.2 கிலோ எடையுடன் குழந்தை: அதிக எடைக்கு காரணம் என்ன? மருத்துவர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னையில் வியாபாரியின் மனைவிக்கு 5.2 கிலோ எடையில் ஆண்குழந்தை பிறந்தது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் குடிநீர் கேன் விநியோகம் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (30). இவருக்கு அதே பகுதியில் உள்ள டபிள்யூ.சி.எஃப். மருத்துவமனையில் நேற்று 5.2 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. இது தமிழகத்தில் அதிக எடையுடன் பிறந்த இரண்டாவது குழந்தையாகும்.

சில மாதங்களுக்கு முன்பு மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5.5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதுதான் தமிழகத்திலேயே அதிக எடை கொண்ட குழந்தையாக உள்ளது. 5.2 கிலோ கொண்ட குழந்தை குறித்து டபிள்யூ.சி.எஃப். மருத்துவமனையின் முதுநிலை மகப்பேறு மருத்துவர் ராஜசேகர் கூறியதாவது:

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடையளவு 2.75 கிலோவாகும். இந்தக் குழந்தை சராசரி எடையை விட இரட்டிப்பு எடையுடன் பிறந்திருக்கிறது. அதிக எடை கொண்ட குழந்தை பிறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ததில், குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தின் 9-வது மாதத்தில், நடைப்பயிற்சி கூட செய்ய வாய்ப்பில்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தது தெரியவந்தது. இதனாலேயே குழந்தையின் எடை அதிகரித்துள்ளது.

குழந்தை அதிக எடையுடன் இருந்தால் பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும். இதனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் அச்சத்துடன்தான் பிரசவம் பார்ப்பார்கள். இந்த பிரசவத்தில் தாய்க்கு எந்த பிரச்சினையும் இன்றி குழந்தை பிறந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT