கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதித்தவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா முர்சிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுதீப் பிஸ்வாஸ் (30). 3 ஆண்டுகளுக்கு முன் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சேர்ந்தார்.
கல்வி தீபம் ஏற்றியவர்
வெளி மாநில கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியராகவும் இருந்து வந்தார். கடந்த 23-ம் தேதி காலை மர்ம கும்பலால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் அடிபட்டு சுயநினைவு இழந்தார்.
சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் திங்கள் கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுயநினைவு இழந்ததால், அவரை தாக்கியவர்கள் குறித்து எந்த விபரமும் தெரியவில்லை. ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரிக்கின்றனர்.
யார் இந்த பிஸ்வாஸ்?
‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்கு நிச்சயம் சுதீப் பிஸ்வாஸ் குறித்து சிறிதேனும் நினைவில் நிற்கும். இவர் குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நமது நாளேட்டில் தனி செய்தி வெளியானது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் மேற்குவங்கம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் என வட மாநில கூலித் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் அடிக்கடி இடம் பெயர்பவர்கள். அதிகபட்சம் ஓராண்டுக்கு மேல் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதில்லை.
இலவச பயிற்சி
கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கும் செல்வதில்லை. அழுக்கு படிந்த தேகத்தோடு, மண்ணில் விளையாடி பொழுதைக் கழித்து வந்தனர். இதையறிந்த அப்போதைய ஆட்சியர் நாகராஜன், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனுக்காக அதே பகுதியில் குறுகிய கால, நீண்ட கால இலவச பயிற்சி மையங்களை அரசின் சார்பில் உருவாக்கினார்.
தாய்மொழி மட்டுமே தரமான கல்விக்கு கைகொடுக்கும் என்பதால் ஹிந்தி, வங்கம் என அந்த கூலித் தொழிலாளிகளின் தாய்மொழியில் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டன. அதை போதிக்க ஆசிரியர்கள் குறித்த தேடலில் ஈடுபட்ட போது தான் பி.ஏ. ஆங்கிலப் படிப்பை பாதியில் விட்டு, குடும்ப சூழல் காரணமாக செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணிக்கு வந்த சுதீப் பிஸ்வாஸ் குறித்து தகவல் வந்தது.
218 குழந்தைகளுக்கு கல்வி
மேற்கு வங்கத்தை சேர்ந்த 218 குழந்தைகளுக்கு வங்க மொழியில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக சுதீப் பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டார். செங்கல் சூளை பணியை விட்டவர் அக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சுற்றி சுழன்றார். இதற்கென அவருக்கு சிறிய அளவிலான தொகை சம்பளமாக வழங்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளி குழந்தைகளை படிப்பதற்கான விதையை ஆட்சியர் விதைத்தார். அதற்கு உரமிடும் பணியை சுதீப் பிஸ்வாஸ் செய்து வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தது தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை பாதித்துள்ளது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் கூறும்போது,
“எந்த காரணத்துக்காக சுதீப் பிஸ்வாஸ் தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. முதல்கட்டமாக அதே பகுதியில் உள்ள சில வெளிமாநில கூலித் தொழிலாளர்களிடம் விசாரணை நடக்கிறது” என்றார்.
அணைந்த தீபம்
சுதீப் பிஸ்வாஸின் மரணம் குறித்தும் பல்வேறு தகவல்கள் அலையடிக்கின்றன. விபத்து என்றும், தானாகவே தடுக்கி விழுந்து மரணம் என வாய்க்கு வந்த தகவல்களை சிலர் உலா விட்டுள்ளனர். கொலையாக இருக்குமோ என்ற அடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர். எது எப்படியோ வெளி மாநில கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி தீபம் அணைந்திருப்பது வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.