கருங்கல் சந்தையில் தள்ளாத வயதிலும், 90 வயது மூதாட்டி வெற்றிலை விற்பனை செய்து சந்தைக்கு வருபவர்களின் பார்வையையும் அன்பையும் கவர்ந்து வருகிறார்.
கருங்கல் சந்தையை கடந்து செல்பவர்கள் ஒருமுறையேனும் நிச்சயம் அவர் மீது தங்கள் பார்வையை பதித்துதான் செல்வார் கள். மொத்த சந்தையிலும் தனிக்கவனம் பெறுவதற்கு அந்த மூதாட்டியின் வயோதிகம் காரணமாய் இருந்தாலும், அவரது தன்னபிக்கை அவரை உற்சாகமாக வலம் வரச் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
வட்டார மொழி வாசம்
“என்ன மக்கா வேணும்? வெத்தலியாடே? எவ்ளோ பிள்ளே?” என்று வட்டார மொழி நடையில் சந்தையில் வெற்றிலை விற்பனை செய்யும் அன்னத் தாய்க்கு 90 வயது. இன்றைய நவநாகரிக உலகில், துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கி, பாரம்பரியத்தை தொலைத்ததன் எதிர்விளைவு பதின் பருவங்களில் மூக்கு கண்ணாடியும், பெயர் தெரியாத நோய்களும் வாழ்வியல் துணையாய் ஒட்டிக் கொண்டன. ஆனால், இச்சந்தையில் வெற்றிலை விற்கும் அன்னத்தாய் பாட்டி 90 வயதிலும் கண்ணாடி இல்லாமல் கொடுக்கும் சில்லறை களை கூட கச்சிதமாய் எண்ணு கிறார். ரூபாய் நோட்டுக்களை பிரித்து அடுக்குகிறார்.
இயற்கை தந்த ஆரோக்கியம்
அவரிடம் பேச்சு கொடுத்த போது மண் மணம் கலந்து நம்மை ஆச்சரியப்படுத்தினார். “அன்னிக்கு இயற்கை முறையில் விளைந்த விளைபொருட்களை சாப்பிட்டேன். அதனால ஆரோக் கியமாக இருக்கேன். எந்த நோயும் என்னை அண்டல” என்று சொல்லி விட்டு வெடித்து சிரிக்கிறார். மேலும் அவர் கூறியதாவது:
எனக்கு ஒரு மகன், இரண்டு பொண்ணுங்க. என் வீட்டுக்காரரு இறந்து பல வருஷம் ஆச்சு. பிள்ளைகளை கட்டிக் கொடுத்து பேரன், பேத்தியெல்லாம் எடுத் தாச்சு. என் பையனும், மருமகளும் இறந்துட்டாங்க. இப்போ பேரன் வீட்டுல இருக்கேன். கேரள மாநிலம் பத்தளம், கோழிக்கோடு பகுதியில் இருந்து வெற்றிலைகளை வாங்கி வந்து விற்பனை செய்றேன்.
வார்த்தைகளின் வலிமை
வயசான பாட்டி தானே, இவளுக்கு எதுக்கு இந்த வேலைன்னு நினைக்கலாம். நான் மொத்தமா வெற்றிலை, பாக்கு வாங்கி, கருங்கலில் உள்ள பல சில்லறை வியாபாரிகளுக்கு கொடுத்துட்டு இருக்கேன். தினம் 500 ரூபாய் வரைக்கும் இதில் வருமானம் வருது.
ஒரு கட்டு வெற்றிலை 80 ரூபாய்க்கு வித்துட்டு இருக்கேன். நான் அரசாங்கத்துட்ட எந்த உதவியும் எதிர்பார்க்கலை. கடைசி நிமிடம் வரைக்கும் வியாபாரம் செஞ்சு, உழைச்சு சாப்பிடுவேன்” என்று தீர்க்கமாய் முடித்த அன்னத்தாயிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் வலிமை அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது.