தமிழகம்

ஜெயலலிதா அவதூறு வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி விசாரணையின் போது சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆடிநாதன் இன்று உத்தரவிட்டார்.

இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மீனவர்கள் விவகாரம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கள் மீதான அவதூறு வழக்கிலும் அவர் இதே தேதியில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT