தமிழகம்

6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பெருங்குடி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

பெருங்குடியில் தனது பள்ளியில் பயிலும் 11 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பாதிரியாருமான ஜெயபாலன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தும் அதை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து கிண்டி மகளிர் காவல் நிலையத்திலும் பாதிரியார் ஜெயபாலனுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

அங்கும் புகாரை வாங்கவில்லை. இந்த செய்தி பெற்றோர் மத்தியில் கோபத்தை எழுப்பியது, இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் பெற்றோரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் கோபாவேசத்தில் இருந்த பெற்றோர் மற்ற மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸாரின் காலில் விழுந்து பள்ளியின் தலைமையாசிரியரை தங்களிடம் ஒப்படைக்குமாறு மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

அங்கு வந்த நீலாங்கரை உதவி ஆணையர் பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானம் செய்து பள்ளிக்கு முன் பெற்றோரிடம் புகாரை பெற்றுக்கொண்டார். பின்னர், தலைமை ஆசிரியரான பாதிரியார் ஜெயபாலனை துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பெற்றோர் அளித்த புகார் உண்மை என தெரிந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின்( குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமை படுத்துதல் தடைச்சட்டம்) கீழ் பாதிரியார் ஜெயபாலனை போலீஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT