சிங்கப்பூர் பாணியில் கழிவுநீரைச் சுத்திகரித்து வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 4.5 கோடி லிட்டர் விநியோகிக்க சென்னைக் குடிநீர் வாரியம் திட்ட மிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடசென்னை யில் 68 தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட இருப்பதால், இங்கு குடிநீர் மற்றும் பிற உபயோ கத்துக்கான தண்ணீரின் தேவை அதிகரிக்கும்.
வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அடுத்த ஆண்டு 3 கோடி லிட்டரும், 2020-ம் ஆண்டு 7 கோடி லிட்டரும், 2030-ம் ஆண்டு 7.5 கோடி லிட்டரும் தண்ணீர் தேவைப்படும் என்று இட்காட் நிறுவ னத்தின் ஆய்வு கூறுகிறது. தொழிற்சாலைகளுக்காக தனியாக நீர் ஆதாரங்கள் இல்லை. சென்னைக் குடிநீர் வாரியம், மழைநீர் மற்றும் நிலத்தடி நீரைச் சுத்தம் செய்துதான் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பிற உபயோகத்துக்காக பயன்படுத்து
வதில் தீவிர முயற்சி மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூர் பாணியில் சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரைச் சுத்திகரித்து பிற உபயோகத்துக்குப் பயன்படுத்த சென்னைக் குடிநீர் வாரியம் திட்ட மிட்டுள்ளது.
இதற்காக கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட மூன்றாம் நிலை எதிர்மறை சவ்வூடுபரவல் முறை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் 34 தொழிற்சாலை களுக்கு குடிநீர் தரத்திலான தண்ணீர் வழங்கப்படும். இதனால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.74 கோடி வருவாய் கிடைக்கும். இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியதும், தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் 4.5 கோடி லிட்டர் குடிநீர், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க இம்மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும். 2 ஆண்டுகளில் இப்பணி நிறை வடையும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.