தமிழகம்

ஆஸ்திரேலியா திருப்பியளித்த சிலைகளை அரியலூர் கோயிலுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய பிரதமர் திருப்பியளித்த சிலைகளை, அவற்றின் இருப்பிடமான அரியலூர் கோயில்களுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நல்லெண்ண நடவடிக் கையாக, ஆஸ்திரேலிய அருங் காட்சியத்துக்கு இந்தியாவிலி ருந்து கடத்திச் செல்லப்பட்ட 2 சிலைகளை வெள்ளிக்கிழமை அளித்தார்.

10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதனமிக்க நர்த்தன நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளான அவை, தமிழகத்தின் அரியலூர் மாவட்ட கோயில்களில் இருந்து 2008-ல் களவு போனவை.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷ் கபூர் என்பவரால் கடல் கடந்து களவுபோன தமிழகத்தின் கலை பொக்கிஷங்களின் வரிசையில் இந்த சிலைகளும் அடங்கும்.

இதுகுறித்து அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும், பகுதியின் வரலாற்று ஆய்வாளருமான இல.தியாகராசன் கூறியபோது, “இந்த சிலைகளை டெல்லியில் வைக்காமல், அவற்றின் இருப்பிடமான அரியலூர் கோயில்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், ஆகம முறைப்படி உரிய பூஜை புனஸ்காரங்களை செய்து, சிலைகளை இழந்த கோயில்களின் புனிதத்தை மீட்க வேண்டும். ஒரு காலத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கிய பகுதியில் இடையில் நாத்திக கொள்கைகள் பரவியதன் ஒரு பக்க விளைவாகவே கோயில்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி இம்மாதிரி தொன்மையான சிலை திருட்டுக்கு காரணமாகிவிட்டது.

தொடரும் சிலை திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்துவ தோடு, சிலைகளை கணக்கெடுத்து ஆவணப்படுத்துவதும் அவசியம்” என்றார்.

திரும்ப கிடைத்துள்ள நடராஜர் சிலையின் சொந்த ஊரான புரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவரும் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலருமான ஆர்.உலகநாதன் கூறியபோது, “இதே சிலை 25 வருடங்களுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் வேலுவால் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.

அப்போதே சிலைகளைப் பாதுகாக்க முனைந்திருந்தால் கபூர் கோஷ்டியால் கடல் கடந்து கடத்திச் செல்லப்பட்டிருக்காது. தற்போது புரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற இருக்கிறது. சிலை இங்கே வர சரியான நேரம் இது என்பதால் ஊர் மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அரியலூர் மட்டுமல்லாது தமிழகம் முழுக்கவே சிலைகள் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டத்தில் வருடக்கணக்கில் இழுவையாக இருக்கும் சுபாஷ் கபூர் வழக்கை விரைவாக்கி, அந்த கோஷ்டியால் களவாடப்பட்ட ஏனைய சிலைகளையும் மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT