தமிழகம்

மதுரை என்கவுண்ட்டர்: தப்பியோடிய முக்கியக் குற்றவாளி மாயக்கண்ணன் சரண்

எஸ்.சுந்தர்

கடந்த வியாழனன்று மதுரை என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகளான சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியின் கூட்டாளி மாயக்கண்ணன கோர்ட்டில் சரண்டைந்தார்.

சனிக்கிழமையன்று மாயக்கண்ணன் விருதுநகர் ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அலங்காநல்லூர் காவல்நிலைய எல்லைக்குள் வரும் சிகந்தர்சாவடியில் மாயக்கண்ணன் வீட்டில்தான் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகிய தாதாக்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போலீஸ் வருவதைப் பார்த்த மாயக்கண்ணன் அன்று தப்பி ஓடினார்.

இதனையடுத்து போலீஸார் மாயக்கண்ணனை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் மாயக்கண்ணன் சரணடைந்தார்.

மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் மார்ச் 5ம் தேதி வரை மாயக்கண்ணனை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னணி விவரம்:

மதுரை கூடல் நகர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் ரவுடிகள் ஒன்றுகூடி சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரவுடிகள் தங்கி இருந்ததை பார்த்த போலீஸார் சுற்றி வளைத்தனர். ரவுடிகளை சரண்அடையுமாறு போலீஸார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீஸாரைத் தாக்க முயற்சித்தனர். சில ரவுடிகள் தப்பி ஓடினர். சிலர் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டனர். இதில் ஒரு போலீஸுக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக போலீஸார் அவர்களை நோக்கி தற்காப்புக்காக திருப்பி சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடிகள் மந்திரி (எ) முத்து இருளாண்டி (28), கார்த்திக் (எ) சகுனி கார்த்திக் (29) குண்டுபாய்ந்து பலியானார்கள். மற்ற ரவுடிகள் சிதறி ஓடினார்கள். இரண்டு ரவுடிகள் போலீஸாரிடம் சிக்கினர்.

போலீஸார் நடத்திய வேட்டையில் முக்கிய குற்றவாளியான கண்ணன் என்கிற மாயக்கண்ணன் (40) தப்பி ஓடிவிட்டார். இவர் சொந்த ஊர் மதுரை மாட்டுத்தாவணி. மாயக்கண்ணன் மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி பலரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் என பல்வேறு வழக்குகள் உள்ளன.

மாயக்கண்ணன் மீது 6 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொழில் அதிபர்களை கடத்தி சென்று பணம் பறிப்பது பின்னர் தலைமறைவாகி விடுவது வழக்கம் என்பதால் மாயக்கண்ணனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

கொலையான முத்து இருளாண்டி, மதுரை வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என 15 வழக்குகள் மதுரை ராமநாதபுரம் காவல் நிலையங்களில் உள்ளன. இதில் 4 கொலை வழக்குகள் அடக்கம்.

சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு குற்றவாளியான கார்த்தி(எ) சகுனி கார்த்தி மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 14 வழக்குகள் உள்ளன. இதில் 4 கொலை வழக்குகள் அடக்கம். இவர்கள் இருவரும் பிரபல ரவுடி காளி (எ) வெள்ளைக்காளியின் கூட்டாளிகள்.

கொல்லப்பட்ட ஒரு ரவுடி துப்பாக்கியால் சண்டை போட்டுள்ளார். அப்போது போலீஸார் சுட்டதில் துப்பாக்கியுடன் சுருண்டு விழுந்து இறந்தார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT