தமிழகம்

கடத்தப்பட்ட சிலைகள் குறித்த ஆவணங்களை சரிபார்க்க சர்வதேச போலீஸ் இன்று புதுச்சேரி வருகை

குள.சண்முகசுந்தரம்

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் பற்றிய விவரங்களை சரிபார்ப்பதற்காக சர்வதேச போலீஸ் அதிகாரிகள் இன்று புதுச்சேரி வருகின்றனர்.

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற் சிலைகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற பஞ்சாபை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்ற சிலைக் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சாமி சிலைகள் பாங்காக் வழியாக அமெரிக்கா வுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களுக்கு கோடிக் கணக் கான ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து கோயில் சிலைகளை கடத்துவதற்கு சென்னையில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த அசோக் சஞ்சீவி என்பவர் தலைமையில் ஒரு குழு செயல்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சாமி சிலைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார்.

இதேபோல் இன்னும் 22 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டுமே எட்டுச் சிலைகள் கடத்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர வழக்குப் பதிவாகாத சிலைக் கடத்தல் சம்பவங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில் நடராஜர் சிலை கடத்தப்பட்டபோது அங்கிருந்த சிவகாமசுந்தரி அம்மன் சிலையும் விநாயகர் சிலையும் கடத்தப்பட்டது. அந்த அம்மன் சிலை சிங்கப்பூரிலும் விநாயகர் சிலை அமெரிக்காவில் உள்ள டொலைடோ அருங்காட்சியகத்திலும் இருப்பது உறுதி செய்திருக்கும் சர்வதேசப் போலீஸார், கடத்தபட்ட எஞ்சிய சிலைகளில் பெரும்பகுதி இருக்கும் இடங்களையும் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 23 சிலைகள் குறித்த ஆவணங்களை புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் சர்வதேச போலீஸுக்கு ஏற்கெனவே அளித்திருக்கிறது. இந்த நிலையில், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகள் உண்மையில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டவைதானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக சர்வதேச போலீஸின் ஒரு அங்கமான ‘ஹோம் லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்’ அமைப்பின் அதிகாரிகள் இரண்டு பேர் இன்று (திங்கள்) புதுச்சேரி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் தமிழக கோயில் சிலைகள் தொடர்பாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை தங்களிடம் உள்ள சிலைகள் குறித்த புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களோடு சரிபார்த்து உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவே அவர்கள் இங்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பிரெஞ்சு ஆய்வு நிறுவன அதிகாரிகள், “வழக்கமாக சிலைக் கடத்தல் விவகாரங்களை விசாரிக்கும் சர்வதேச போலீஸார், தங்களிடம் உள்ள கடத்தல் சிலைகள் குறித்த ஆவணங்களை இ-மெயிலில் எங்களுக்கு அனுப்பி அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்வர். இந்த 22 சிலைகள் தொடர்பாகவும் அவர்கள் கேட்டிருந்த விவரங்களை நாங்கள் இ-மெயிலில் ஏற்கெனவே அனுப்பி வைத்திருக்கிறோம். அப்படி இருந்தும் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக விவரங்களை தெரிந்து கொள்வதற்காக சர்வதேச போலீஸ் அதிகாரிகள் இங்கு வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT