தமிழகம்

மின்னல் தாக்கி 3 இளைஞர்கள் பலி: 9 பேருக்கு செவித்திறன் பாதிப்பு - கறி விருந்தில் பரிதாபம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே மின்னல் தாக்கி, 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேருக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கூட்டம், கூட்ட மாக ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு சென்று, ‘கறி விருந்து’ சமைத்து சாப்பிடுவது வழக்கம். நேற்று, சேரன்மகாதேவி அடுத்த மேலக் கூனியூர் கிராமம், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கிராஜ் மகன் செந்தில்வேல் முருகன் (26), மதியழகன் மகன் முருகன் (31), மந்திரகுமார் மகன் விஜய் (19) மற்றும் ஏ. இசக்கி (45) உட்பட 12 பேர் கும்பலாக கறி விருந்து சமைக்க காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டில் விருந்துக்கான சமையல் பணியில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் திடீ ரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியதில், செந்தில்வேல்முருகன், முருகன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கிருந்த மற்ற 9 பேருக்கும் செவித்திறன் பாதிக்கப்பட்டது. இசக்கி என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து, உயிரிழந்தவர்களின் சடலங் களை மீட்டனர். காயம் அடைந்த இசக்கி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு, மேல்சிகிச்சைக்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இசக்கி உட்பட 9 பேருக்கும் காது கேட்கவில்லை. ‘செவிப்பறைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அனைவரும் காது கேட்கும் திறனை தற்காலிகமாக இழந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப்பின் அவர்களுக்கு செவித்திறன் மீண்டும் வர வாய்ப்புள்ளதாகவும்’ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT