தமிழகம்

ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: செப்.9-ல் சென்னையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி செப்.9-ல் சென்னையில் மதிமுக சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி.

லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட இசைப்பிரியா படுகொலைக் காட்சியும், எட்டு இளம் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், பாலச்சந்திரன் படுகொலையும், மனசாட்சி உள்ள இதயங்களை உலுக்கிவிட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற படுகொலைச் சம்பவங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அடிப்படையில் ஐ.நா. வின் மனித உரிமை ஆணையம், மார்ட்டி அட்டிசோரி உள்ளிட்ட மூவர் விசாரணைக் குழுவை அறிவித்தது. ஆனால், ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு தடுக்கிறார் ராஜபக்சே.

ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச அனுமதிக்கக் கூடாது; ஐ.நா. மன்றம் அமைத்த விசாரணைக் குழுவை இந்தியாவில் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்திலும், புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளிலும் நடத்தப்பட வேண்டும், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிறையில் வதைபடும் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், தமிழக மீனவர்களுக்கு நாளும் கேடு செய்யும் சிங்கள அரசின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டெம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், தலைநகர் சென்னையில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகத்தினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT