தமிழகம்

நல்லக்கண்ணு, கக்கன் மகனை வீட்டை விட்டு வெளியேற்றும் விவகாரம்: ஸ்டாலின், டிடிவி, அழகிரி, வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, கக்கனின் மகன் ஆகியோர் குடியிருக்கும் குடியிருப்பை காலி செய்ய அரசு அதிகாரிகள் நோட்டீஸ் விட்டு அதில் நல்லக்கண்ணு காலி செய்துள்ளார். இவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசியல் கட்சித்தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி.தினகரன், கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், ஜி.கே.வாசன், முத்தரசன், நெடுமாறன், ஜாவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வெளியேற்றுவதை நிறுத்தக்கோரியும், மாற்று இடம் வழங்கக்கோரியும் அறிக்கை விட்டுள்ளனர்.

ஸ்டாலின்:

“தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட மூத்த தோழர் நல்லகண்ணு சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அவர்களை அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் காரணமாக, உடனடியாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவருடைய நற்பண்பு போற்றுதலுக்குரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான 94 வயதுடைய மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாசன்:

நல்லக்கண்ணு அவர்களை வீட்டை காலிச்செய்ய கூறும் நோட்டீஸ் ஒருவேளை நியாயமானதாக இருந்தாலும் அவருக்கு வேறு வீடு உடனடியாக ஒதுக்கிட வேண்டும், அதேப்போன்று கக்கன் அவர்களின் மகன் வீட்டை காலி செய்தால் அவருக்கும் வேறு வீடு ஒதுக்கித்தர அரசு முன்வரவேண்டும் என வாசன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்:

“முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பெரியவர் நல்லக்கண்ணு மற்றும் தியாகி கக்கன் அவர்களின் மகன் ஆகியோரை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து பழனிச்சாமி அரசு வெளியேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது.

அந்த இடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கித் தராமல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது சரியானதல்ல. தியாகி கக்கன் அவர்களின் மகன் குடியிருந்த வீடானது  எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது.

இவர்களை வெளியேற்றியதன் மூலம் தியாகத்தை மதிக்கத்தெரியாதவர்கள் என்பதை பழனிசாமியும் அவரது நிர்வாகமும் நிரூபித்துள்ளது.இதற்குப் பிறகாவது தவறை உணர்ந்து, நல்லக்கண்ணு மற்றும் தியாகி கக்கன் அவர்களின் மகனுக்கும் வேறு இடத்தில் உடனடியாக வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்:

தமிழகத்தில் கட்சிகளுக்கு அப்பால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

அந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக வீடுகளைக் கட்ட இருப்பதால் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை தமிழக அரசு காலி செய்ய வைத்துள்ளது. எந்த ஒரு மாற்று ஏற்பாடுமின்றி தமிழக அரசின் நெருக்கடி காரணமாக அனைவரும் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

ஆர். நல்லக்கண்ணுவும் கேகே நகரில் வாடகை வீடு ஒன்றுக்கு இடம் பெயர்ந்து உள்ளார். அரசு குடியிருப்பில் ஒப்பீட்டளவில் குறைவான வாடகைக்கு குடியிருந்த அவர் தற்போது அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்காக எண்ணற்ற  தியாகங்களைச் செய்தவரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கு  சொந்தக்காரருமான நல்லகண்ணு அவர்களுக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை உடனடியாக ஒதுக்கித் தருமாறு  தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெடுமாறன்:

“சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு, அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம், தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மறைந்த தியாகத் தலைவர் கக்கன் அவர்கள் அதே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இப்போது அவர் குடும்பத்தினரையும் வெளியேறும்படி அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு இரு தியாகக் குடும்பங்களுக்கும்  அரசு வீடுகளை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்” இவ்வாறு நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா:

“மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது

நல்லகண்ணுக்கு குடியிருப்பு ஒதுக்காமல் மற்றவர்களை போன்று வெளியேற்றியது கண்டனத்திற்குரியது

நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு உடனடியாக வேறு குடியிருப்பை ஒதுக்கித்தர வேண்டும்” இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT