தமிழகம்

சமூக வலைதளங்களில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கேட்டது

செய்திப்பிரிவு

சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டது.

மேலும், இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  இந்த ஆலோசனையில் பங்கேற்க தகுதியான நபராக சைன்யா ராமச்சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வேறு சில பணிகள் இருப்பதால் ஜூன் முதல் வாரம் தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வமான முடிவை எட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், தாங்கள் எந்த ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முயற்சிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT