சேலம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1980-ம் ஆண்டுக்குப் பின்னர், 39 ஆண்டுகள் கழித்து தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி வாய்ப்புக்கான கால் தடத்தைப் பதித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடப்பாண்டுடன் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் 1951, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசாமி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1967-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த ராஜாராம் வெற்றி பெற்றார்.
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கிருஷ்ணன் வெற்றி பெற்றார். கடந்த 1977-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கண்ணன் வெற்றி பெற்றார். கடந்த 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனியப்பன் வெற்றி பெற்றார்.
அதன் பின் 39 ஆண்டுகள் கழித்து, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணனை காட்டிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் முன்னணி பெற்று, சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி வேட்பாளராக கால் தடம் பதித்துள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் தமாகா வேட்பாளர் தேவதாஸ், 1998-ம் ஆண்டு சுயேட்சை வேட்பாளர் வாழப்பாடி ராமமூர்த்தி, 1999-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் செல்வகணபதி, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு, 2009-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் செம்மலை ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் 5,51,546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உமாராணி 2,88,936 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தற்போது, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 9-வது சுற்றில் 2,50,974 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணன் 1,86,028 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரைவிட 74,946 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் முன்னிலை வகித்துள்ளார்.
கடந்த 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சேலம் தொகுதியில் கால் தடம் பதித்துள்ளதை அறிந்து, திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து, அனைத்துப் பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.