தமிழகம்

கடன் தொல்லையால் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளித்த பார் உரிமையாளர் உயிரிழப்பு: டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு

கோ.கார்த்திக்

கடன் தொல்லையால் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளித்த பார் உரிமையாளர் உயிரிழந்ததை அடுத்து, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பான் குளம் பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன்(38). இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் பகுதியிகளில் அதிமுகர் ஆனந்தன் என்பவரின் ஆதரவுடன் டாஸ்மாக் கடைகளின் அருகே பார் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பார் வாடகை அவ்வப்போது உயர்த்தப்பட்டதால் நெல்லையப்பன் வட்டிக்குப் பணம் வாங்கி வாடகையை செலுத்தி வந்தாகவும். மேலும், போலீஸாருக்கு மாமூல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நெல்லையப்பன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, வாடகை உயர்வு மற்றும் கடன் தொல்லை தொடர்பாக மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) புகார் அளிக்க வந்தார். ஆனால், போலீஸார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், டிஎஸ்பி அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி நெல்லையப்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் தீயை அணைத்து, அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பன் உயிரிழந்தார்.

இதற்கிடையே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நெல்லையப்பன் அவரது முகநூலில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் நெல்லையப்பன் கூறியுள்ளதாவது:

''அதிமுக பிரமுகரை நம்பி பார் நடத்தி கடன் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. என்னைபோன்றே பார் உரிமம் பெற்றுள்ள நபர்கள் வாடகை உயர்வால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, கடன் தொல்லையால் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும், கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளில் உள்ள பார்களில் மாதம் ஒரு லட்சம் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கித் தரவண்டும் என திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் மிரட்டுகிறார்.

மாமல்லபுரம் டிஎஸ்பி.சுப்புராஜூ ஒரு கடைக்கு மாதம் 1.20 லட்சம் மாதம் மாமூல் பெறுகிறார். இதனால், டாஸ்மாக் பார் நடத்தும் நபர்கள் கடன்தொல்லையால் சிக்கி அவதிப்படுகின்றனர்'' என அந்த வீடியோ காட்சியில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லையப்பன் இறக்கும் முன் செங்கல்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதனிடையே, மாவட்ட எஸ்பி.சந்தோஷ் ஹதிமானி மேற்கொண்ட நடவடிக்கையில், மாமல்லபுரம் டிஎஸ்பி, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் ஆனந்தன் உள்ளிட்ட மூன்றுபேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து, மாமல்லபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி.சந்தோஷ் ஹதிமானி கூறியதாவது: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெல்லையப்பன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் மேற்கண்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஎஸ்பி. சுப்புராஜூ விடுமுறையில் உள்ளதால், பணிக்கு திரும்பிய பின் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT