தமிழகம்

நேற்று குற்றவாளியாக நின்றவர் இன்று எனக்கு எதிராக புகார் அளிக்கிறார்: பார்த்திபன் ட்வீட்

செய்திப்பிரிவு

நடிகர் பார்த்திபன் தன்னை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயன்றதாக அவரது உதவியாளர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை கிண்டலடித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபனிடம் உதவியாளராகவும், கவிஞராகவும் இருந்த ஜெயங்கொண்டான் என்பவர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் பார்த்திபன் வீட்டில் நகை பணம் காணாமல் போன விவகாரத்தில் தன்னையும் சில வேலைக்காரர்களையும் விசாரித்ததாகவும், அதன் பின்னர் அவர்களை பார்த்திபன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகவும், ஆனால் தான் மட்டும் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் நிறுத்திவிட்ட வேலைக்காரரின் விலாசத்தை கேட்டதற்காக சினிமா நிறுவன மாடியிலிருந்து தன்னை தாக்கி கீழே தள்ளி கொல்ல முயன்றதாக புகாரில் தெரிவித்து பாதுகாப்பு கேட்டிருந்தார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை கிண்டலடித்துள்ளார்.

அவரது பதிவு:

“ 'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense -க்கு ஒரு அளவுகோல் இல்லாமல் போய் விட்டது! என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.

மகிழ்ச்சி!  ஏதோ நம்மால் இயன்றது....பாடல் வாய்ப்புதான் வழங்க முடியவில்லை!  (சபையில் பாடல் எழுதி பெயர் வாங்கும் கவிஞர்களும் இருக்கிறார்கள்)”

இவ்வாறு பார்த்திபன் கிண்டலடித்துள்ளார். ஜெயங்கொண்டான் புகாரின்பேரில் பார்த்திபன்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT