3 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல் திமுக பிரச்சார மேடையில் சேர்ந்து பிரச்சாரம் செய்த தமீமுன் அன்சாரி மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமீமுன் அன்சாரி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் வரவில்லை. இதுகுறித்து அமைச்சரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்த டி.ஜெயக்குமாரிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்த பின் சட்டப்பேரவை தலைவர் செயலற்றவராகிறார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து?
சட்டப்பேரவை தலைவருக்கு அந்த அதிகாரம் உண்டு. எதிர்க்கட்சிகள் இதை திசைதிருப்பும் முயற்சியில் குழப்பி விடுகிறார்கள். கொறடா ஆதாரங்களைத் திரட்டி இது கட்சிக்கு எதிரான நடவடிக்கை என ஆதாரத்துடன் கொடுத்துள்ளார்.
கொறடா கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை ஏற்பதும், அதை நிராகரித்து நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டப்பேரவை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.
அந்த அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அவருக்கு அதிகாரம் இல்லை என்பது திசைதிருப்பும் செயல்.
அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அவர் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லாதவராகிறார் என்கிறார்களே?
அது திசை திருப்பும் செயல். அப்படி எந்தச் சட்டத்திலும் இல்லை. அவர்கள் சில தீர்ப்புகளை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள். அந்தத் தீர்ப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதனால் சட்டப்பேரவை தலைவருக்கு உரிய அதிகாரம் உண்டு. முன்னாள் பேரவைத் தலைவர் என்கிற முறையில் எனக்குத் தெரியும்.
அதனால் அவர் எடுக்கும் நடவடிக்கையில் அரசோ அல்லது யாரும் தலையிட முடியாது.
ஆனால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து செயல்பட்ட தமீமுன் அன்சாரி மீது நடவடிக்கை இல்லையே?
திமுக உடனடியாக ஜனநாயகத்தைக் கழுத்தறுத்து விடுவார்கள். எங்களைப் பொறுத்தவரை எப்போதும் அதுபோன்று செயல்பட மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை கட்சித்தாவல் தடைச் சட்டப்படி வருவது போன்று இருந்ததால்தான் 3 பேர் மீது கொறடா நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.
ஆகவே, அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கொறடா சொல்வதையே நானும் சொல்கிறேன், வேறு யார் மீதாவது இதுபோன்ற தவறு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை வரும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. பின் ஒன்றாக இணைந்தது. டிடிவி தினகரன், சசிகலா வெளியேற்றப்பட்டனர். அமமுக என தனி அணியாக டிடிவி அணி செயல்படுகிறது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிமுக எண்ணிக்கை 117 ஆகக் குறைந்தது. பின்னர் சூலூர், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு, ஓசூர் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் காரணமாக அது 114 ஆக மேலும் குறைந்தது.
இதேபோன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முடிவு செய்தது.
சமீபத்தில் கொறடா ராஜேந்திரன் சட்டப்பேரவை தலைவர் தனபாலைச் சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இதையடுத்து மூவருக்கும் சட்டப்பேரவை தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என எச்சரித்திருந்த திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சட்டப்பேரவை தலைவருக்கு எதிராகக் கொண்டுவந்தது. இதற்குப் பின் சட்டப்பேரவை தலைவருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.