வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றும் விநோதம் எல்லாம் தமிழகத்தில்தான் நடக்கிறது. இதன் பின்னணியில்தான் ஓபிஎஸ் வாரணாசி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார் என்கிற சந்தேகம் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்..
மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றார். கோவையிலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகையிடப்பட்டது. கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த ஆட்சேபத்தை திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கிரிராஜன் உள்ளிட்டோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“வாக்குப்பெட்டிகளை மாற்றும் உள் நோக்கத்தோடு அங்கே பெட்டிகளைக் கொண்டுவந்தார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் ஓபிஎஸ், மோடி வேட்பு மனு தாக்கல் செய்த அன்று இங்கிருந்து வாரணாசிக்குச் சென்று அங்கு தனியாக அவருடன் பேசியதாக ஊடகங்களில், பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
ஆகவே, அந்தச் சந்திப்பு இந்தப் பெட்டியை மாற்றுவதற்குத்தான் நடந்ததா என்கிற சந்தேகம் நியாயமாக சாதாரண பொதுமக்களுக்குக்கூட வரும். தமிழ்நாட்டில் பல விநோதங்களும் பல்வேறு வேடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கரூர் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா நான்கைந்து நாட்களாக 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய விஷயங்கள் நடக்கின்றன என நாங்கள் கேட்டுள்ளோம்.
ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் பெட்டியை மாற்றி வைக்கிறார்கள். தமிழ்நாட்டில்தான் மதுரையில் ஆட்சியர் பதில் சொல்ல மறுக்கிறார். தமிழ்நாட்டில்தான் சிசிடிவி கேமரா 2 மணி நேரம் வித்தியாசத்தைக் காட்டுகிறது.
இவ்வாறு நடப்பதற்குக் காரணம் இங்கே ஏதோ சதி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் செய்யும் சதி திட்டத்தை முறியடிக்கும் சக்தி திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு உண்டு''.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.