ஆஸ்திரேலியா நாட்டு வேலைக்காக ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 8 லட்சத்தை இழந்து, முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்புடைய கன்சல்டன்ஸி நிறுவனம் மற்றும் 6 பேர் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சேரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண்குமார் (23). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அன்னூர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே, பிரவீண்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது தாயார் கங்காலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் அண்மையில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக தனது மகனிடம் ஆன்லைனில் தொடர்பு கொண்ட ஒரு கன்சல்டன்ஸி நிறுவனம் ரூ. 8 லட்சம் பணத்தை காட்டுமாறும், வேலைக்கான உத்தரவை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து, அந் நிறுவனம் கொடுத்த 6 பெயர்களிலான வங்கிக் கணக்குகளில் எனது மகன் ரூ. 8 லட்சம் பணத்தை பிரித்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கான உத்தரவை தராமல் ஏமாற்றியுள்ளனர். வேலை குறித்து அவர்களிடம் மீண்டும் எனது மகன் தொடர்புகொண்டு கேட்டபோது ரூ. 87 ஆயிரம் பணத்தை அனுப்பி வைக்குமாறும், வேலை உத்தரவை அனுப்பி வைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மீண்டும் அந்த பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், வேலைக்கான உத்தரவை அனுப்ப வில்லை. பின்னர் விசாரித்த போது அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது. இதனால், மனமுடைந்த எனது மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
எனது மகனின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்புடைய வங்கிக் கணக்கு நபர்களை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், அந்த கன்சல்டன்ஸி நிறுவனம், வங்கிக் கணக்குகளில் தொடர்புடைய 6 பேர்களின் மீது ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், சம்பந்தப்பட்ட கன்சல்டன்ஸி நிறுவனம், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது கிடையாது. போலியாக கன்சல்டன்ஸி நிறுவனத்தை ஆன்லைனில் உருவாக்கி, பிரவீண்குமாரை ஏமாற்றியுள்ளனர். அந்த ஆன்லைன் முகவரியும், வங்கிக் கணக்கு முகவரிகளும் போலியாக உள்ளன. நைஜீரியர்கள், இந்த கைவரிசையை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.