தமிழகம்

பாபநாசம் அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்: தூர்வார கனிமொழி வலியுறுத்தல்

அசோக் குமார்

பாபநாசம் அணையைத் தூர்வார வேண்டும் என கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இவற்றில், இரண்டாவது பெரிய அணையான பாபநாசம் அணை வறண்டு கிடக்கிறது. 143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 9.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 14.82 கனஅடி தண்ணீர் வந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய அணையான மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 63.05 அடியாக இருந்தது. இந்த அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 63.05 கனஅடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 275 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

பாபநாசம் அணை வறண்டு சிறிதளவு நீர் சேறும், சகதியுமாகக் கிடப்பதால், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததாலும், கடுமையான வெப்பத்தின் காரணமாகவும் அணைப் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், பாபநாசம் அணையைத் தூர்வார வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், "திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடிக்குக் கீழ் குறைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. கட்டப்பட்ட காலம் முதல் தூர்வாரப்படாத அணையின் அடிப்பகுதி சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் சிறிதளவு நீரும் துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்படுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

தமிழக அரசும், அதிகாரிகளும் அலட்சியப் போக்கை விடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்டு இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், அணையைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கனிமொழி என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT