தமிழகம்

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைவராக நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவராக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, கடந்த பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அறக்கட்டளையின் அறங்காவலர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர் நீதிமன்றம் நியமித்து வருகிறது. தற்போதைய அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குழு நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கான அறங் காவலர்கள் குழு, கடந்த 2002-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 19-ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. அடுத்த அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு செப்டம்பர் 20-ம் தேதி (நாளை) முதல் செயல்பட வேண்டும்.

8 அறங்காவலர்கள்

அறங்காவலர் குழுவில் நியமனம் பெறுவதற்காக 60 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறக்கட்டளையின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலை யில், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கிறோம். அவர் 20-ம் தேதி (நாளை) பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அறங்காவலர்கள் நியமனத் துக்காக ஏற்கெனவே வந்துள்ள 60 விண்ணப்பங்களை மட்டும் அவர் பரிசீலித்து, அவற்றில் தகுதி யானவற்றை அக்டோபர் 6-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அந்த விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான 8 பேர் அறங்காவ லர்களாக நியமிக்கப்படுவர். இதுதொடர்பான விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT