தலித்துகளுக்கு வெற்றி அவ்வளவு சுலபம் இல்லை என்று திருமாவளவன் வெற்றி குறித்து பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.
தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் மட்டும், தொடக்கம் முதலே திருமாவளவன் முன்னிலை, பின்னடைவு என்று மாறிமாறி வந்தது. இதனால், சிறிது பரபரப்பு நிலவியது. இறுதியாக திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளது.
திருமாவளவன் வெற்றி பெற்றிருப்பது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் “மகிழ்ச்சி. இந்த வார்த்தையில் அண்ணன் திருமாவளவன் வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது. மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!
ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! சிதம்பரம்” என்று தெரிவித்துள்ளார்.