தமிழகம்

ஸ்டாலின் கண்ணோட்டம் தவறானது: கே.பி.முனுசாமி

செய்திப்பிரிவு

எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சபாநாயகர் மீது குறை கூறுவது தவறான கண்ணோட்டம் என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த வில்லாபுரத்தில் தேர்தல் அலுவலகத்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ''22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவரது கருத்தை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்றுக்க்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு அமோகமாக உள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியைப் பொறுத்தவரையில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக ஆட்சி மிகச் சிறப்பான முறையில் சரியாக நடந்து வருகிறது. எந்தக் கட்சியும் அதிமுகவுக்கு நிகரில்லை. சட்டம்- ஒழுங்கு என எல்லாவற்றிலும் பாதுகாப்பை உணரும் தமிழக மக்கள் அதிமுகவுக்கே வாக்களிக்க உள்ளனர்.

சபாநாயகர் தனபால் நடுநிலையானவர். அவர் மீது  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர,  சபாநாயகரைக் குறை கூறி வருவதை ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார் . இந்த விவகாரத்தில் ஸ்டாலினின் கண்ணோட்டம் தவறானது'' என்றார் கே.பி.முனுசாமி.

முன்னதாக, விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.  புகார் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்த நிலையிலும் 3 எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ஸ்டாலின் அவரைக் குறை கூறி வருவது தவறான கண்ணோட்டம் என்றார் கே.பி. முனுசாமி.

SCROLL FOR NEXT