மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராவார் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) தேனியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக ஜெயித்திருக்கிறது. தேனியில் பணம் விளையாடியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 500 கோடி ரூபாய் பணம் செலவழித்துள்ளனர். இது யாருடைய பணம்? ஓபிஎஸ் அப்பாவுக்கு 500 கோடி பணம் வந்துவிட்டதா? எப்படி இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதை மக்கள் கேட்க வேண்டும்.
அதனை மக்கள் கேட்கவில்லையே. தேனி தொகுதி மக்கள் இதனை கேட்கவில்லை. தேனியில் ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயிக்கிறார் என்றால் என்ன நியாயம் இது? தேனியில் அவர் மகன் ஜெயிக்கிறார் என்றால், ஆண்டிப்பட்டி, பெரியகுளத்திலும் அதிமுக ஜெயித்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நான் பாராட்டுவேன்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து அமமுக மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளோம். மக்களிடம் பெயர் வாங்கியுள்ளோம். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. டிடிவி தினகரன், சசிகலா ஆலோசனைப்படிதான் இனி கட்சி நடக்கும்
பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக மோசம் போய்விட்டது. இது மோடி மற்றும் ஓபிஎஸ் ஆசீர்வாதத்தால் நடந்தது. மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வராக வருவார். எடப்பாடி பழனிசாமியை தூக்கி விடுவார்கள். மோடி சொல் படித்தான் தமிழகத்தில் எல்லாம் இனி நடக்கும். இந்தியாவில் மிருக பலத்துடன் பாஜக ஜெயித்துள்ளது. பிரதமர் மோடி சொல்வதைத்தான் அதிமுக கேட்கும். ஓபிஎஸ் தான் அடுத்த முதலமைச்சர்.
மோடி பலமுறை முதல்வராக இருந்தவர். அவருக்கு எல்லா நுணுக்கங்களும் தெரியும். இந்திய மக்களை எப்படி ஆட்டிப் படைத்தால் எப்படி ஓட்டு வாங்க முடியும் என தெரியும். காங்கிரஸ் பாவம். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றனர். ராகுலுக்கு சிறிய வயது. வளர்ந்து வருபவர். அவரை அமேதியில் தோற்கடிப்பது என்ன நியாயம்? தியாகம் செய்த குடும்பம் காங்கிரஸ். வயநாட்டில் தான் ராகுலை ஜெயிக்க வைத்தார்கள். தென் மாநிலம் தான் ஜெயிக்க வைத்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் தேவையே இல்லை. 5,000 கோடி செலவு செய்து தேர்தல் நடத்துவதற்கு எதற்கு தேர்தல் ஆணையம்?
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் எப்படி ஜெயித்தார். துரோக ஆட்சி எனக்கூறி ஜெயித்தார். இந்த தேர்தலிலும் நாங்கள் ஜெயித்திருப்போம். ஆனால், அதிமுக - பாஜக வந்து விடப்போகிறதோ என பயந்து திமுகவுக்கு வாக்களித்தனர். எங்களை வெறுத்து ஓட்டுப் போடவில்லை. அதிமுகவை ஒழிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
திமுக 37 இடங்களில் ஜெயித்திருக்கிறது. ஆனால், முல்லைப்பெரியாறில் தண்ணீரை நிரப்ப மாட்டார்கள். கர்நாடகா மேகேதாட்டு அணையை கட்டத்தான் போகிறார்கள். இலங்கை பிரச்சினை தீராது. எல்லாம் சர்வ சாதாரணமாக இரண்டு ஆண்டுகளில் நடக்கும். இந்த 2 ஆண்டுகளுக்குள் எல்லா திட்டங்களும் கொண்டு வந்து தமிழகத்தை நாசமாக்காமல் விட மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களை மோடி கொல்லாமல் விட மாட்டார்? தமிநாடு மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும்.