பொள்ளாச்சி அருகே 5 மாதக் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ததில் அப்பெண் உயிரிழந்தார். அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவரை போலீஸார் நாகை மாவட்டத்தில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே நெகமம் அடுத்த வடசித்தூர் பகுதியில் வசித்து வந்த 5 மாத கர்ப்பிணியான வனிதாமணிக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வனிதாமணி மகன் மாரிமுத்துக்கு (19) அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கர்ப்பமாக இருப்ப துசிரமம் என நினைத்து வனிதாமணி கருவைக் கலைக்க முடிவு செய்தார்.
அதற்காக வடசித்தூரில் போலி ஆயுர்வேத மருத்துவமனை நடத்திவந்த முத்துலட்சுமி என்பரிடம் சென்று கருக்கலைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். போலி மருத்துவர் முத்துலட்சுமி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டு உள்ளனர்.
இதில் வனிதாமணியின் உடல்நிலை மோசமானதால், போலிமருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணியை ஆபத்தான நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் வனிதாமணி இறந்து விட்டார். இதையடுத்து போலி மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாகினர்.
இது குறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், எஸ்.ஐ. மணிமாறன், காந்திமதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் முத்துலட்சுமியைத் தேடி வந்தனர். முத்துலட்சுமியின் செல்போன் சிக்னலைக் கண்காணித்ததில் அவர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் ஓர் உறவினரின் வீட்டில் தங்கியிருப்பதுதெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அக்கரைப்பேட்டையில் பதுங்கியிருந்த முத்துலட்சுமியைக் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது: ''முத்துலட்சுமி கடந்த15 ஆண்டுகளாக வடசித்தூர் பகுதியில் போலி மருத்துவமனை நடத்தி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் மீது சுகாதாரத் துறைக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை உயர்அதிகாரிகள் இவரது மருத்துவமனையைச் சோதனையிடமுயன்ற போது முத்துலட்சுமி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால் சில மாதங்களாக மருத்துவமனை செயல்படாமல் இருந்தது. அண்மையில் முத்துலட்சுமி மருத்துவமனையைத் திறந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் மெட்டுவாவியை சேர்ந்த வனிதாமணி இவரிடம் கருக்கலைப்பு சிகிச்சைக்கு சென்று உயிரிழந்துள்ளார். தலைமறைவாக உள்ள முத்துலட்சுமியின் மகன் கார்த்திக்கைத் தேடிவருகிறோம்'' என்றனர்.