தமிழகம்

செஞ்சி அருகே வடக்கிருந்து ஜீவ சமாதி அடைந்த சமணத்துறவி

எஸ்.நீலவண்ணன்

செஞ்சி அருகே சுப்ரமத் பிரபாவதி மாதாஜி (65)  என்ற பெண் துறவி வடக்கிருந்து ஜீவ சமாதி அடைந்தார்.

செஞ்சி அருகே மேல்சித்தாமூர் கிராமத்தில் தமிழக சமணர்களின் தலைமை பீடமான ஜினகஞ்சி மடமும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  பழமையான மல்லிநாதர் மற்றும் பார்சுவநாதர் கோயில்களும் உள்ளன. தமிழகத்திற்கு யாத்திரை வரும் சமணத்துறவிகள், இக்கோயிலுக்கு வந்து  செல்வது வழக்கம்.

2 மாதங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலத்திலிருந்து, இரண்டு திகம்பர சமணத்துறவிகள் தலைமையில்  9 பெண் துறவியர் தமிழகம் வந்தனர். இவர்களில் சுப்ரமத் பிரபாவதி மாதாஜி (65)  என்ற பெண் துறவி, பொன்னூர் மலை, வாழப்பந்தல் சமணர் கோயில்களுக்குச் சென்றார். பின்னர்  சமணமத கோட்பாட்டின் படி, உண்ணா நோன்பிருந்து, சமாதி நிலையை அடைய முடிவு செய்தார்.

அந்தவகையில்  25 நாட்களுக்கு முன் மேல்சித்தாமூர் சமணர் மடத்திற்கு அவர் வருகை புரிந்தார். அன்று முதல் உணவு உண்ணாமல்  தண்ணீர் மட்டும் அருந்தி வந்தார். இந்நிலையில் கடந்த   27ம் தேதி முதல், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். வடக்கு நோக்கி தலை வைத்துப் படுத்திருக்கும் இவரது அருகில், 24 மணி நேரமும், பெண் துறவியரும், பக்தர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணிக்கு நாடித்துடிப்பு அடங்கி முக்தி அடைந்தார். இதனை மருத்துவர் குழு உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை  சமண சமய நெறிமுறைகளின் படி  ஜீனகஞ்சி மடம் சார்பில்  கொப்பரை தேங்காய், சந்தன கட்டை, நெய் ஆகியவை கொண்டு கட்டைகள் அடுக்கப்பட்டு ,அதில் வடக்கிருந்து முக்தியடைந்த  பெண் துறவியின் உடலுக்குத் தீ மூட்டினர். அப்போது அப்பகுதி மக்களும், சமண சமத்தினரும் தரையில் விழுந்து வணங்கினார்கள்.

வடக்கிருத்தல்

பாண்டவர்கள் ஒரு நாயை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக இறந்து விழுந்த கதை மகாபாரதத்தின் 18-வது பர்வத்தில் உள்ளது. பரீக்ஷித் மன்னன் பாகவத புராணம் கேட்டுக்கொண்டே உண்ணாவிரதம் இருந்தது பாகவத புராணத்தில் இருக்கிறது. இந்த பிராயோபவேசம் என்னும் வழக்கத்தை ராமாயண, மகாபாரத இதிகாசங்கள் குறிக்கின்றன. சமணர்களும் இப்படிச் செய்வர். குமரி முதல் இமயம் வரை உள்ள இவ்வழக்கத்தைப் புறநானூறும் குறிக்கிறது.

தசரதன் இறந்தவுடன், பரதனை ஆப்கனிஸ்தான் — ஈரான் நாட்டு எல்லையில் இருந்த கேகய நாட்டில் இருந்து பயங்கரமான வேகத்தில் செல்லும் குதிரை பூட்டிய ரதத்தில் உத்தரப் பிரதேசத்துக்கு அழைத்து வந்ததை வால்மீகி ராமயாணம்  விளக்குகிறது.

கோப்பெருஞ்சோழனுக்குப் புதல்வர்களுடன் கொஞ்சம் மனஸ்தாபம். உடனே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தவர்கள், இனி வாழ வேண்டாம் என்று தீயில் குதிப்பர் அல்லது ஆற்றில் குதிப்பர் அல்லது உண்ணாவிரதம் இருப்பர்.

ராம பிரான் சரயூ நதியில் ஜல சமாதியில் இறந்த அன்று அவருடன் ஆயிரக்கணக்காணோர் நதியில் குதித்தனர். காரணம் பெரியோர்கள் இறக்கும் போது நாமும் இறந்தால் அவர்களுடன் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகலாம். இதன் காரணமாக பொத்தியார், பிசிராந்தையார் என்று ஏராளமான புலவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கோப்பெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பந்தலுக்கு ஓடோடி வந்தனர்.

SCROLL FOR NEXT