சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். சாத்தூர் அருகேயுள்ள துலுக்கன் குறிச்சியில் இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் அனுமதி பெற்று இந்த ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 46 அறைகளில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. மருந்து கலவை செய்யும் போது திடீரென உராய்வு ஏற்பட்டதால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து சேதம் அடைந்தது. இடிபாடுகளில் சிக்கி துலுக்கன் குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் (50), அம்மையார் பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். உயிரிழந்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.