திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,040 துணை ராணுவத்தினர் உட்பட 15,698 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக் குறிச்சி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் சத்ய பிரத சாஹு நேற்று கூறியதாவது:
இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளிலும் தற்போது வரை 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தொகுதிகளுக்கு செலவின பார்வையாளர்கள் வந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் கருத்து கணிப்புகளை வெளியிடுவோர் மீது ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 4,037 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 3,465 பேரும், சூலூரில் 4,123 பேரும், அரவக்குறிச்சியில் 3,073 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த 4 தொகுதிகளிலும் 1,040 துணை ராணுவத்தினர் உட்பட மொத்தம் 15,698 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் ரூ.156 கோடியே 31 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்கள் அடிப்படையில் ரூ.98 கோடியே 31 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.57 கோடியே 50 லட்சம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதேபோல, 2,202 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில் திருப்பி அளித்தது போக, 14 கிலோ தங்கம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உளவுப்பிரிவு ஐஜி விவகாரம்
தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றார். அடுத்த சில தினங்களில், தமிழக உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அசுதோஷ் சுக்லா கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘மதுரை விவகாரத்தில் கிடைத்த அறிக்கை கள், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அளித்த விளக்க கடிதம் ஆகியவை தேர்தல் ஆணையத் துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல், தேர்தல் டிஜிபி அளித்த பரிந்துரையும் தேர்தல் ஆணையத் துக்கு அடுத்த சில தினங்களி லேயே அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.