புதுச்சேரியின் ஒரு வாக்குச்சாவடியில் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கு கடந்த 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகரின் மின்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 10-ல் மாதிரி வாக்குப்பதிவுகளை வாக்குப்பதிவு அதிகாரி நீக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதியம் ஒரு மணிக்கு வாக்குப்பதிவு அதிகாரி இயந்திரத்தைப் பிரித்து மாதிரி வாக்குகளை எடுக்க முயன்றார். இதற்கு ஏஜெண்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இரண்டு மணி நேரத்திற்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குப் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகர் வார்டு 10-ல் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் 12 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அருண் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குச்சாவடியில் 473 ஆண்களும் 479 பெண்களும் என 952 வாக்காளர்கள் உள்ளனர். மறுவாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும். வெங்கட்டா நகர் வாக்குச்சாவடி ஏற்பட்ட குளறுபடி காரணமாக வாக்குப்பதிவு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.