உயிருக்குப் போராடிய நபரைக் காக்க முதலுதவி செய்த எழுத்தாளர் சண்டையிடுவதாக தவறாக நினைத்த பொதுமக்கள், அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையை அடுத்து போலீஸார் அவரை விடுவித்தனர்.
நெல்லை மாவட்டம், பத்தினிபாறையைச் சேர்ந்தவர் ப்ரான்சிஸ் கிருபா. கவிஞர், எழுத்தாளரான இவர், சென்னைக்கு வந்து பிரபல வார இதழிலும் வேலை செய்தார். நாளடைவில் மது போதைக்கு அடிமையானதால் அனைத்து தொடர்புகளையும் இழந்து வறுமை காரணமாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போனார்.
அனைத்தையும் இழந்து தாடி வளர்த்து கோடம்பாக்கம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நிலையைப் பார்த்து நண்பர்கள் அவ்வப்போது உதவுவது உண்டு. இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இவர் கோயம்பேடு மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். மதுபோதையில் இருந்த ப்ரான்சிஸ் கிருபா அங்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் வலிப்பு வந்து விழுவதைப் பார்த்துள்ளார். உடனே அவர் அருகில் சென்று முதலுதவி செய்ய முயற்சி செய்தார். வலிப்பு வந்த நபருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.
அவரது நெஞ்சை அழுத்தி செயற்கை சுவாசம் அளித்து முதலுதவி செய்துள்ளார். இதை அங்குள்ள சிலர் பார்த்துவிட்டு இருவருக்குள்ளும் சண்டை நடக்கிறது என்று நினைத்து ப்ரான்சிஸ் கிருபாவைத் தாக்கியுள்ளனர். இதற்குள் மாரடைப்பு வந்த நபர் இறந்து போனார். உடனடியாக ப்ரான்சிஸ் கிருபாவைப் பிடித்து வைத்த அங்குள்ள நபர்கள் கோயம்பேடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் அங்குள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ப்ரான்சிஸ் கிருபாவைக் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் யார் என அடையாளம் தெரியவில்லை. அவரது பிணத்தை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், ப்ரான்சிஸ் கிருபாவை கைது செய்ய முடிவெடுத்தனர். சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மாதேஸ்வரன் விடுப்பில் இருந்ததால் குற்றப்பிரிவு ஆய்வாளர் தீபக்குமார் பணியில் இருந்தார்.
மன நோயாளிகள் இருவரும் சண்டை போட்டதில் ஒருவர் இறந்துவிட்டார் என போலீஸார் முடிவெடுத்து நடவடிக்கைக்கு தயாராகினர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு கொலை குற்றம் சாட்டப்பட்டவர் மன நோயாளியல்ல, அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பிரபல பத்திரிகையில் சினிமா செய்தியாளராக இருந்தவர். மது போதையால் இந்நிலைக்கு ஆளாகிவிட்டார் என்ற தகவல் அறிந்து ஊடகங்கள் ஸ்டேஷனுக்கு விரைந்தன.
அங்கு ப்ரான்சிஸ் கிருபா பற்றி போலீஸாரிடம் தெரிவித்தனர். கிருபாவும், ''தான் முதலுதவி மட்டுமே செய்தேன், மதுபோதையில் இருந்ததாலும், தாடியும் மீசையுமாக இருந்ததாலும் தன்னை போலீஸார் குற்றவாளியாக, மனநலம் பாதிக்கப்பட்டவராக கருதி குற்றச்செயலில் ஈடுபட்டதாக பதிவும் செய்துவிட்டனர்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ப்ரான்சிஸ் கிருபாவின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இறந்துபோனவர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு வலிப்பு வந்து மாரடைப்பு ஏற்பட்டது என்கிற உண்மை வெளியானது. இதையடுத்து போலீஸார் ப்ரான்சிஸ் கிருபாவை விடுவித்தனர். வழக்கின் பிரிவும் மாற்றப்பட்டது.
அதேபோன்று இறந்துபோனவர் மனநோயாளி என்று போலீஸார் தெரிவித்திருந்த நிலையில் அவரும் மனநோயாளி அல்ல. அவர் கோயம்பேட்டில் கூலி வேலை செய்யும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நித்தின் பவுல் என்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தை போலீஸார் கையாண்ட விதம் விமர்சனத்தை எழுப்பியுள்ள நிலையில் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.