முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூலை 5-ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சோழிங்கநல்லூரில் கடந்த ஜனவரி 20-ம் தேதி சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், “அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காக, தலைமை செயலகத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடைபெற்றுள்ளது எனவும், அதேபோல் கொடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்பு படுத்தியும் பேசியுள்ளார். மேலும் முதல்வர், துணை முதல்வர் பதவி விரைவில் காலியாகும். இதை சொன்னால் என் மீது முதல்வர் வழக்கு போடுவார். முடிந்தால் என் மீது முதல்வர் வழக்கு தொடரட்டும், நான் அதற்குத்தான் பேசுகிறேன்” என்று சவால் விடும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சதீஷ்பாபு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில், சோழிங்கநல்லூரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பேசிய தாக கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு தள்ளிவைப்பு
அப்போது, அரசு வழக்கறிஞர் சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதி வசந்தலீலா விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதம் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.