விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓஎன்ஜிசி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உள்பட 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் அத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையொப்பமிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்; வேளாண் நிலங்களை - நீரை நாசப்படுத்தி கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
மீறிச் செயல்படுத்தினால், மக்கள் எரிமலையாகிச் சீறி எழுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆட்சியின் கடைசிக் காலத்தில்கூட மக்களுக்கு நல்லது செய்யக்கூடாது என்று பாஜக அரசு முடிவுக்கு வந்துவிட்டதோ" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.