தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவினுடையது என, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைத் தோற்கடித்து, காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"சிறிய பிரச்சினைகளுக்காக இந்தத் தேர்தல் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், நாங்கள் எல்லோரும் லட்சக்கணக்கிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இது மத்திய அரசு மாற வேண்டும், இந்தி, இந்துத்துவத்திற்கு எதிராக தமிழகம் இருக்க வேண்டும் என அளித்த வாக்குகள்.
தமிழகத்தில் பாஜகவுக்கு விழுந்த வாக்குகள், பாஜகவினுடையது அல்ல. அவை அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள், அவ்வளவுதான். 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் தான் பாஜகவின் வாக்குகள்".
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.