தமிழகம்

தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெரிகட்டுகிறது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

செய்திப்பிரிவு

தினகரனுக்கு தேள் கொட்டினால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெரிகட்டுகிறது. துரோகமும், விரோதமும் இணைந்து செயல்படுகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

வடசென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுகவுக்கு ஏற்பட்ட பயம் காரணமாக 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. பயம் திமுகவுக்குத்தான். கடந்த காலங்களில் தமிழகத்தை டெல்லிக்கு அவர்கள் அடகு வைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் சட்டப்படி ஆட்சி செய்து வருகிறோம். சட்டத்தை யார் மீறினாலும் தவறுதான். 3 எம்எல்ஏக்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல் படுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. அதனால்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் பேரவைத் தலைவரிடம் கொறடா மனு அளித்துள்ளார். பேரவைத் தலைவரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஒன்றரை ஆண்டுகளாக அமமுகவில் அவர்கள் பொறுப்பில் இருந்த நிலையில், இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடவடிக்கை எடுத்துவிட முடியாது. அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவசரம் காட்டாமல், நிதானத்தை கடை பிடித்துதான் புகார் அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அடிப்படையில் பேரவைத் தலைவர் முடிவெடுப் பார், அவரது உரிமையில் யாரும் தலையிட முடியாது.

நாங்கள் மூவருமே அதிமுகவில் தான் தொடர்கிறோம் என்று அவர்கள் விளக்கம் அளித்தால் அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதா, கூடாதா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. பேரவைத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும். அவருக்குரிய விதிகள்படி அவர் நடவடிக்கை எடுப்பார்.

பேரவைத் தலைவர் மீது திமுக 2-வது முறையாக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதே?

நம்பிக்கையில்லா தீர்மானத் துக்கே அர்த்தமில்லாமல் போய் விட்டது. தற்போது விரோதமும், துரோகமும் இணைந்துவிட்டன. தினகரனுக்கு தேள் கொட்டினால், திமுக தலைவருக்கு நெரி கட்டுகிறது. அந்த அடிப்படையில் தான் அவர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT